Sunday 13 March 2011

இவர்தான் மச்சக்காரன்


* எனக்கு பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். எந்த வரனும் சரியாக அமையவில்லை. அப்போதுதான், இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தோம். என்ன ஆச்சரியம்... அடுத்த மாதமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்காக இங்கே எழுதுகிறேன்.
- அமலா, லால்குடி.

* எங்கள் வீட்டில் ‘போர்வெல்‘ அமைக்க முடிவு செய்தோம். 350 அடி வரை போர் போட்டால்தான் எங்கள் பகுதியில் தண்ணீர் கிடைக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும், குறைந்த அடியில் தண்ணீர் கிடைக்க வேண்டி, இந்த கோவிலில் ஆசீர்வதித்து தரப்பட்ட திருநீற்றை தண்ணீரில் கரைத்து ஓரிடத்தில் ஊற்றிவிட்டு, அந்த இடத்தில் போர் போட ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஆச்சரியம் காத்திருந்தது. 350 அடியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் மிகக்குறைந்த அடியிலேயே கிடைத்தது. எங்களுக்கு அருள் வழங்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லவே இதை எழுதுகிறேன்.
- விஜயா, மேடவாக்கம்.

* எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அப்போதுதான், இந்த கோவில் பற்றி உறவினர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டோம். உடனே, இங்கு வந்து வழிபட்டு பரிகாரத்தையும் செய்து முடித்தோம். அதன் பலனாக நான் குழந்தை பாக்கியம் பெற்றேன். இப்போது நல்லபடியாக குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டேன். அதற்காக, இந்த மச்சக்கார முருகனுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
- சசிரேகா, கோவை.

- சென்னையின் புறநகர் பகுதியான போரூரை அடுத்த வானகரம் - மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவிலில் உள்ள பக்தர்களுக்கான பதிவேட்டை புரட்டினால், இப்படி எழுதியிருப்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம்.

இதனால்தான் என்னவோ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலைத் தேடி வருகிறார்கள்.


2003-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையில் திடீரென்று ஒரு மச்சம் தோன்றியது. அவரது வலது கன்னத்தில் மேல்புறம் சிவப்பு நிறத்தில் அது காணப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசம் ஆனார்கள். இங்குள்ள முருகப்பெருமானும் ‘மச்சக்காரன்‘ ஆனார்.

இந்த தகவல் முருகப்பெருமான் - வள்ளி வரலாற்றிலும் உள்ளது.


முருகப்பெருமானை திருமணம் செய்து கொள்வதற்காக வேடர்குல தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்தாள் வள்ளி. முதன் முதலில் அவளை காண வந்த முருகப்பெருமான், வேடன் உருவத்தில் அங்கே வந்தார். வள்ளியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினார். ஆனால், வள்ளியோ கோபம் கொண்டு சீறினாள்.

மறுநாள் மறுபடியும் வந்தார் முருகப்பெருமான். இப்போது அவர் வந்தது ஒரு வயோதிகர் வேடத்தில். ஆனாலும், அவரை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள் வள்ளி. அவரை அடையாளம் காண வைத்தது, அவரது முகத்தில் இருந்த மச்சம்தான். ‘வேடம் போடும்போது மச்சத்தையும் மறைக்க வேண்டும் என்பது தெரியாதா?‘ என்று கேட்ட வள்ளியை, தனது அண்ணன் விநாயகரின் துணையுடன் மணந்து கொண்டார் முருகப்பெருமான்.

கைகூடும் திருமண பாக்கியம்

அதனால், மேட்டுக்குப்பம் மச்சக்கார முருகப்பெருமான் கோவிலுக்கு வந்து 2 நெய் தீபம் ஏற்றி, 9 எலுமிச்சம் பழங்களை பெற்று வழிபட்டால் 3 மாதத்திற்குள் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். ஆயில்யம், மூலம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், செவ்வாய் மற்றும் ராகு -கேது தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்களும் இங்கு வந்து வழிபடுவதன் மூலம் உடனடியாக திருமண வாய்ப்பை பெற்று மகிழ்கிறார்கள்.

மேலும், இந்த கோவில் குருஜி, சரியாக பேச்சு வராத குழந்தைகளின் நாவில் ‘ஓம்‘ என்ற மந்திரத்தை வேலால் எழுதி, விபூதி கொண்டு நாவில் தடவி, எலுமிச்சம்பழத்தை மந்திரித்துக் கொடுக்கிறார். அதன்பின்னர், அந்த குழந்தைகள் படிப்படியாக நன்றாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
கழுத்து சரியாக நிற்காமலும், கால் சரிவர நடக்க முடியாமலும் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.

மற்றும், வேலைவாய்ப்பு, குடும்ப நம்மதி உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேறுகின்றன.

திருமணம் தடைபடுபவர்களுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை வேளையில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. பேச்சு வராத, சரிவர நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு பிறகு பரிகாரம் செய்யப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்‘ வழிபாடு. இந்த பைரவர் இந்த கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமி திதியில் இந்த சன்னதியில் பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும், கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, வீடு-மனை வாங்கும் யோகம் போன்றவை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.

மேலும், இந்த கோவிலில் கிழக்கு பார்த்த சக்கர விநாயகர், வானத்தீஸ்வரர், தெற்கு பார்த்த கோபால கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, கிழக்கு பார்த்த ஷீரடி சாய்பாபா, மேற்கு பார்த்த சனிபகவான், யோக ஆஞ்சநேயர், லட்சுமணர், சீதை சமேத ஸ்ரீராமர், விஷ்ணு துர்காதேவி ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

Wednesday 9 March 2011

பரிகார தலம் ஸ்ரீகாளஹஸ்தி

 சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்த முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்கு பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம்போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இருந்தது.

சிலந்தி கதை : இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதேபோன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.


பிரம்மனின் படைப்பு : ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள்.

சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.


வாயு தலம் : கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு(காற்று)வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

அமைவிடம் : ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் வரும் பக்தர்கள் 4 அல்லது 5 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம்.


தோஷங்கள் விலக பரிகார பூஜை : ஸ்ரீகாளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு-கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

தினமும் காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான கவுண்டரில் ரூ.250, ரூ.500, ரூ.1000, ரூ.1,500-க்கு டிக்கெட் விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த டிக்கெட் விற்பனை செய்யப்படும். இதில் ஒரு டிக்கெட் வாங்கினாலே போதுமானது, பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவிலில் கொடுத்து விடுகிறார்கள். ஒரு டிக்கெட்டுக்கு 2 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்துகொள்ளலாம். 45 நிமிடம் பூஜை நடைபெறும்.

1,500 பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் தனியாக தோஷ பூஜை செய்கிறார்கள். இதில் கணவன், மனைவியர் கலந்துகொள்ளலாம். இவர்களுக்கு சிறப்பு தரிசனம், ஆசீர்வாத தரிசனம் இலவசம். பூஜைக்கு செல்பவர்கள் தாமரைப்பூ, வில்வ இலை வாங்கி செல்வது நல்லது. இதற்காக கோவிலில் ஆங்காங்கே இருந்த பொருட்களை விற்பவர்கள் உள்ளனர். ரூ.20 கொடுத்தால் பை நிறைய இந்த பொருட்கள் கொடுக்கிறார்கள்.

இந்த பூஜை செய்பவர்கள் அன்று இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி செல்வது நல்லது.

கலைவாணி... அருள் தருவாய் நீ...

ல்விக் கடவுளான சரஸ்வதிக்கு தமிழகத்தில் ஒரே ஒரு ஊரில் மட்டும் தான் மிகப்பெரிய தனிக் கோவில் அமைந்துள்ளது. அந்த ஊரில் சரஸ்வதி பிறந்து வளர்ந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த ஊர் தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.

தல வரலாறு : பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி, இந்த சத்தியலோகமே கல்விக்கு அதிபதியான தன்னால் பெருமை அடைகிறது என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலை செய்வதால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்றும், தனது மனைவி என்பதாலேயே சரஸ்வதிக்கு பெருமை என்றும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.

இதுவே பெரும் பிரச்சினையாகி இருவரும் ஒருவரையருவர் சபித்துக் கொண்டனர். அதன்விளைவு... சோழநாட்டில் புண்ணியகீர்த்தி-சோபனை என்ற தம்பதியினருக்கு ‘பகுகாந்தன்’ என்ற மகனாக பிரம்மாவும், ‘சிரத்தை’ என்ற மகளாக சரஸ்வதியும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும், பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனை தேட ஆரம்பித்தனர்.

அப்போது தான் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர-சகோதரி நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் இந்த உலகமே பழிக்கும் என்று அஞ்சினார்கள்.

அவர்களது பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில் சிவபெருமானை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக, சிவபெருமானே அவர்கள் முன்பு தோன்றி, ‘இந்த பிறவியில் சகோதர-சகோதரிகளாக அவதரித்த நீங்கள் திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு’ என்று சரஸ்வதிக்கு அருள்பாலித்தார்.

அதன்படி, கன்னி சரஸ்வதியாக இந்த கோவிலில் இந்திர திசையை நோக்கி அருள் பாலிக்கிறார் சரஸ்வதி.


சிலை அமைப்பு : இந்த கோவில் மூலவரான சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் ‘சின்’ முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி இருக்கிறாள்.

சோழர்கள் ஆட்சிக்காலத்தில், இந்த ஊர் இரண்டாம் ராஜராஜ சோழனால், அவனது அவைப் புலவரான ஒட்டகூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. அந்த புலவரது பெயராலேயே இந்த ஊர் ‘கூத்தனூர்’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், ஒட்டகூத்தர் தான் இந்த கோவிலை கட்டினார் என்றும் இந்த கோவில் தலபுராணம் கூறுகிறது.

கூத்தனூரில் எழுந்தருளியுள்ள சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதனாலேயே, அவர் புகழ்பெற்ற கவிஞராக முடிந்தது என்றும் கூறுகிறார்கள்.


கோவில் அமைவிடம் : திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூத்தனூரை சென்றடைய வேண்டும். கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அருள் வேண்டும் என்பதால், இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏராளம். 

சரஸ்வதி பூஜை அன்று இந்த சரஸ்வதியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பு. இங்குள்ள கலைவாணியை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

Tuesday 8 March 2011

கற்புக்கரசிக்கு கோவில்



த்தினி என்று சொன்னதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவள் சாட்சாத் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியே தான்!

தனது வாழ்வில் மாதவி குறுக்கிட்டதால், அவளிடமே மயங்கிக்கிடந்து வணிகத்தை மறந்தான், பொருளை இழந்தான் கண்ணகியின் கணவனான கோவலன். இழந்த பொருளை மீண்டும் பெற கண்ணகியோடு தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு புறப்பட்டான். மனைவியின் காற்சிலம்பை விற்க சென்ற இடத்தில் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

இதையறிந்த கண்ணகி பொங்கியெழுந்தாள். தனது கணவன் கள்வன் இல்லை என்று பாண்டிய மன்னன் முன்பு நிரூபித்துக் காட்டினாள். மதுரை மாநகரை தீக்கு இரையாக்கியவள், மேற்கு திசை நோக்கி நடந்தாள். சேர நாட்டு மலைப்பகுதியை அடைந்தாள். அங்கு, வேங்கை மரத்தடியில் சோர்ந்து கிடந்த கண்ணகியை, 14 நாட்களுக்கு பின்னர், கொலை செய்யப்பட்டு வானுலகம் சென்ற கோவலன் புஸ்பக விமானத்தில் வந்து தன்னுடன் அழைத்துச் சென்றான். அந்த காட்டில் இருந்த குன்றக் குறவர்கள் இந்த காட்சியை கண்டு வியந்தனர்.

ஒருமுறை மலை வளம் காண வந்த சேர மன்னன் செங்குட்டுவனிடம், குன்றக் குறவர்கள் தாங்கள் கண்ட காட்சியை கூறினார்கள். கண்ணகி பற்றி அறிய ஆவல் கொண்ட செங்குட்டுவன், தனது அவை புலவர் சீர்தலைச் சாத்தனாரை அணுகி விளக்கம் கேட்டான். அரசனுக்கு நடந்த சம்பவத்தை விளக்கினார் புலவர்.

கண்ணகியின் வரலாற்றை கேட்டு வியப்படைந்த செங்குட்டுவன், தனது நாட்டு மலைக்கு வந்து விண்ணகம் சென்ற பத்தினி தெய்வமாகிய கண்ணகிக்கு கோவில் எழுப்ப முடிவு செய்தான். அதற்காக, இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை வடித்தான். கோவிலையும் கட்டி முடித்தான்.  


பல நாட்டு அரசர்கள் முன்னிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகமும் செய்தான். கண்ணகி மக்களால் வழிபடும் தெய்வமானாள். 



 ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னன் செங்குட்டுவன், கண்ணகிக்கு கட்டிய இந்த கோவில், மங்கலாதேவி கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்த கோவில், சிலப்பதிகாரத்தில் மங்கல மடந்தை என்று குறிப்பிடப்படுகிறது.

ஆதாரங்கள் : இந்த கோவில் தற்போது தமிழ்நாடு-கேரளா எல்லையில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. செங்குட்டுவன் தான் இதை கட்டினான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கி இருந்தான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. இன்று பெரியாறு என்று அழைக்கப்படும் ஆறு தான் அன்று பேரியாறு என்று அழைக்கப்பட்டது. கண்ணகி கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து பார்த்தால் பேரியாற்று நீர்த்தேக்கத்தை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை தெளிவாக காணலாம்.

கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக உள்ள இந்த கோவிலை நாம் எளிதில் சென்று பார்த்துவிட முடியாது. காரணம், அந்த கோவிலுக்கு செல்லும் வழி கரடு முரடான மலைப்பாதையாகும். கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக கண்ணகி கோவிலுக்கு செல்ல பாதை வசதி இல்லை. கேரளா சென்று தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கிறார்கள். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோவிலை காண அனுமதி. அதனால், இக்கோவிலுக்கு வர விரும்புவோர் முன்கூட்டியே திட்டமிட்டு வருவது தான் நல்லது.




எப்படி செல்ல வேண்டும்? : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் அல்லது மதுரை சென்று, அங்கிருந்து தேனி, கம்பம், மேல்கூடலூர் வழியாக மேற்கு தொடர்ச்சிமலையை கடக்க வேண்டும். மலையை கடந்ததும் கேரள மாநில எல்லை நகரான குமுளியை அடையலாம். அங்கிருந்து ஜீப் மூலம் கண்ணகி கோவிலுக்கு செல்லலாம்.

குமுளியில் நிறைய வாடகை ஜீப்புகள் உள்ளன. மலை மேல் உள்ள கண்ணகி கோவிலுக்கு செல்ல கட்டணமாக ஒரு நபருக்கு சுமார் 50 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இறங்கும்போது தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
கண்ணகி கோவிலுக்கு வர திட்டமிடுபவர்கள், சித்ரா பவுர்ணமிக்கு முந்தைய நாளே குமுளிக்கு வந்துவிட வேண்டும். அங்குள்ள விடுதிகளில் ஒன்றில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை கோவிலுக்கு புறப்படலாம். 


கண்ணகியை தரிசித்து முடிந்ததும், அங்கிருந்து மிக அருகில் (2 கிலோ மீட்டர்) உள்ள தேக்கடிக்கு சென்று சுற்றுலாவை அனுபவிக்கலாம். 

குமுளியில் பட்டை, கிராம்பு, இலவங்கம், ஏலம், மிளகு போன்ற வாசனைப் பொருட்கள் பேமஸ் என்பதால் அவற்றை மிகக்குறைந்த விலையில் அள்ளி வந்து, பக்கத்து வீட்டாரை வியப்பில் ஆழ்த்தலாம்.

அதிசய அமர்நாத்


ண்களுக்கு எட்டிய தூரம் வெள்ளை நிறத்தின் ஆக்கிரமிப்புகளாய் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள், ஆங்காங்கே இரைச்சலோடு சலசலக்கும் நீரோடைகள், ரத்த ஓட்டத்தையும் சில நேரங்களில் கட்டிப்போடும் அதிகபட்ச குளிர் & இவற்றையும் தாண்டி, மனித இனத்தின் உச்சக்கட்ட தேடலாக அந்த இடத்தை காண பயணம் செய்கிறார்கள் சிலர்.


உடலே ஜில்லிடும் அந்த இடத்தில் அந்த காட்சியை கண் குளிர கண்டுவிட்டால், வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்ததாக உணர்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த இறைவனையே அப்போது நேரில் தரிசித்ததாக உணர்கிறார்கள்.


ந்த அற்புத இடம் தான் அமர்நாத் பனிக் குகை!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத். நெடுங்காலமாகவே இங்கு பக்தர்கள் யாத்திரையாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஜூன்-ஆகஸ்ட் மாதம் இந்த யாத்திரை நடைபெறும்.


முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பால்காம் என்ற இடத்தை அடைய வேண்டும். பால்காம் வரை செல்ல சாலை வசதி இருப்பதால் அந்த இடத்தை எளிதில் சென்றடைந்து விடலாம். கடல் மட்டத்தில் இருந்து 7,200 அடி உயரத்தில் பால்காம் அமைந்துள்ளது. இங்கே யாத்திரிகர்கள் தங்க விடுதி வசதிகளும் உள்ளன.


பால்காமில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் அமர்நாத் பனிக்குகை அமைந்துள்ளது. பால்காமில் இருந்து அமர்நாத்திற்கு கால்நடையாகத் தான் செல்ல வேண்டும். எப்படியும் 3 & 4 நாட்கள் ஆகிவிடும். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.


இவற்றிற்கு தனி கட்டணம். செல்லும் வழியில் கூடாரம் அமைத்து தான் தங்க வேண்டும். இங்குள்ள தேவதாரு மரங்கள் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்க ஏற்றவையாக உள்ளன. இந்த யாத்திரையின்போது உடல் சோர்வு அதிகமாகும் என்பதால், தேவையான உணவு, மருந்து பொருட்களை யாத்திரை செல்பவர்கள் கூடவே எடுத்துச் செல்வது தான் நல்லது.

அமர்நாத்தை நெருங்க, நெருங்க... குளிரின் தன்மை அதிகமாக இருக்கும். எந்த திசையில் திரும்பி பார்த்தாலும் பனிக்கட்டி... பனிக்கட்டி மாத்திரம் தான். சில இடங்களில் அதிர்ஷ்டமாய் ஆங்காங்கே குட்டையான பச்சை மரங்கள் எட்டிப்பார்ப்பதை காணலாம்.


உடலை குளிர் ஒருபுறம் நடுங்க வைத்தாலும், காலைச் சூரியனின் பார்வையில் பளிச்சிடும் பிரமாண்ட பனிக்கட்டிகளை பார்ப்பதற்கும் நமது கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூமியில் இயற்கை விரித்துள்ள உண்மையான அழகை இங்கே ரசிப்பதிலும் தனி சுகம் கிடைக்கிறது.


அப்படி, இப்படியாக இயற்கையை பார்த்து ரசித்தபடியும், பிரமித்தபடியும் நடந்து சென்று அமர்நாத்தை சென்றடையும்போது, பக்தர்கள் அடையும் அளப்பரிய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. பனி லிங்கத்தை தரிசிக்க செல்லும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் வரிசையாக அவர்களை தரிசனத்திற்கு அனுப்ப, மாநில அரசு ஏற்பாடு செய்கிறது.


சுமார் 150 அடி உயரம் - அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள் பளிச்சிடும் பனி லிங்கத்தை கண்கள் தரிசிக்கும்போது, அந்த இடத்தை சென்றடைய அதுவரை அனுபவித்த கஷ்டங்கள், துயரங்கள் அத்தனையும் நொடிப் பொழுதில் பறந்து போய் விடுகின்றன. 



மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி விடுகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இங்கே, லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவது தான், இதுவரையும் புரியாத அதிசயமாக உள்ளது.


இந்த அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்த குகையில் வசிக்கும் ஒரு ஜோடி புறாக்களை பார்த்தால் மாத்திரமே அந்த யாத்திரை நிறைவுபெறும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின்படியே ஒரு ஜோடி புறாவும் பக்தர்களுக்கு காட்சித் தருகிறது.


அமர்நாத்தில் எந்த விலங்குகளையும், பறவைகளையும் காண முடியாது. காரணம், அங்கே அவை வாழவே முடியாது என்பது தான். ஆனால், இந்த ஒரு ஜோடி புறா மட்டும் எப்படி வாழ்கின்றன என்ற கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. இறைவனும், இறைவியுமே அப்படி காட்சித் தருகிறார்கள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.


அந்த ஒரு ஜோடி புறாவை பார்த்த மாத்திரத்தில், மனித பிறவி எடுத்ததற்கான அர்த்தத்தை அங்கு வரும் ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். அப்போது அவர்கள் பெறும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை உண்மையான - ஆத்மார்த்தமான மகிழ்ச்சி என்றுகூட கூறலாம்!