கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு தமிழகத்தில் ஒரே ஒரு ஊரில் மட்டும் தான் மிகப்பெரிய தனிக் கோவில் அமைந்துள்ளது. அந்த ஊரில் சரஸ்வதி பிறந்து வளர்ந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த ஊர் தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.
தல வரலாறு : பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி, இந்த சத்தியலோகமே கல்விக்கு அதிபதியான தன்னால் பெருமை அடைகிறது என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலை செய்வதால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்றும், தனது மனைவி என்பதாலேயே சரஸ்வதிக்கு பெருமை என்றும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.
இதுவே பெரும் பிரச்சினையாகி இருவரும் ஒருவரையருவர் சபித்துக் கொண்டனர். அதன்விளைவு... சோழநாட்டில் புண்ணியகீர்த்தி-சோபனை என்ற தம்பதியினருக்கு ‘பகுகாந்தன்’ என்ற மகனாக பிரம்மாவும், ‘சிரத்தை’ என்ற மகளாக சரஸ்வதியும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும், பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனை தேட ஆரம்பித்தனர்.
அப்போது தான் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர-சகோதரி நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் இந்த உலகமே பழிக்கும் என்று அஞ்சினார்கள்.
அவர்களது பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில் சிவபெருமானை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக, சிவபெருமானே அவர்கள் முன்பு தோன்றி, ‘இந்த பிறவியில் சகோதர-சகோதரிகளாக அவதரித்த நீங்கள் திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு’ என்று சரஸ்வதிக்கு அருள்பாலித்தார்.
அதன்படி, கன்னி சரஸ்வதியாக இந்த கோவிலில் இந்திர திசையை நோக்கி அருள் பாலிக்கிறார் சரஸ்வதி.
சிலை அமைப்பு : இந்த கோவில் மூலவரான சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் ‘சின்’ முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி இருக்கிறாள்.
சோழர்கள் ஆட்சிக்காலத்தில், இந்த ஊர் இரண்டாம் ராஜராஜ சோழனால், அவனது அவைப் புலவரான ஒட்டகூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. அந்த புலவரது பெயராலேயே இந்த ஊர் ‘கூத்தனூர்’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், ஒட்டகூத்தர் தான் இந்த கோவிலை கட்டினார் என்றும் இந்த கோவில் தலபுராணம் கூறுகிறது.
கூத்தனூரில் எழுந்தருளியுள்ள சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதனாலேயே, அவர் புகழ்பெற்ற கவிஞராக முடிந்தது என்றும் கூறுகிறார்கள்.
கோவில் அமைவிடம் : திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூத்தனூரை சென்றடைய வேண்டும். கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அருள் வேண்டும் என்பதால், இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏராளம்.
சரஸ்வதி பூஜை அன்று இந்த சரஸ்வதியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பு. இங்குள்ள கலைவாணியை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
0 கருத்துரைகள்:
Post a Comment