Tuesday 8 March 2011

அதிசய அமர்நாத்


ண்களுக்கு எட்டிய தூரம் வெள்ளை நிறத்தின் ஆக்கிரமிப்புகளாய் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள், ஆங்காங்கே இரைச்சலோடு சலசலக்கும் நீரோடைகள், ரத்த ஓட்டத்தையும் சில நேரங்களில் கட்டிப்போடும் அதிகபட்ச குளிர் & இவற்றையும் தாண்டி, மனித இனத்தின் உச்சக்கட்ட தேடலாக அந்த இடத்தை காண பயணம் செய்கிறார்கள் சிலர்.


உடலே ஜில்லிடும் அந்த இடத்தில் அந்த காட்சியை கண் குளிர கண்டுவிட்டால், வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்ததாக உணர்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த இறைவனையே அப்போது நேரில் தரிசித்ததாக உணர்கிறார்கள்.


ந்த அற்புத இடம் தான் அமர்நாத் பனிக் குகை!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத். நெடுங்காலமாகவே இங்கு பக்தர்கள் யாத்திரையாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஜூன்-ஆகஸ்ட் மாதம் இந்த யாத்திரை நடைபெறும்.


முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பால்காம் என்ற இடத்தை அடைய வேண்டும். பால்காம் வரை செல்ல சாலை வசதி இருப்பதால் அந்த இடத்தை எளிதில் சென்றடைந்து விடலாம். கடல் மட்டத்தில் இருந்து 7,200 அடி உயரத்தில் பால்காம் அமைந்துள்ளது. இங்கே யாத்திரிகர்கள் தங்க விடுதி வசதிகளும் உள்ளன.


பால்காமில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் அமர்நாத் பனிக்குகை அமைந்துள்ளது. பால்காமில் இருந்து அமர்நாத்திற்கு கால்நடையாகத் தான் செல்ல வேண்டும். எப்படியும் 3 & 4 நாட்கள் ஆகிவிடும். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.


இவற்றிற்கு தனி கட்டணம். செல்லும் வழியில் கூடாரம் அமைத்து தான் தங்க வேண்டும். இங்குள்ள தேவதாரு மரங்கள் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்க ஏற்றவையாக உள்ளன. இந்த யாத்திரையின்போது உடல் சோர்வு அதிகமாகும் என்பதால், தேவையான உணவு, மருந்து பொருட்களை யாத்திரை செல்பவர்கள் கூடவே எடுத்துச் செல்வது தான் நல்லது.

அமர்நாத்தை நெருங்க, நெருங்க... குளிரின் தன்மை அதிகமாக இருக்கும். எந்த திசையில் திரும்பி பார்த்தாலும் பனிக்கட்டி... பனிக்கட்டி மாத்திரம் தான். சில இடங்களில் அதிர்ஷ்டமாய் ஆங்காங்கே குட்டையான பச்சை மரங்கள் எட்டிப்பார்ப்பதை காணலாம்.


உடலை குளிர் ஒருபுறம் நடுங்க வைத்தாலும், காலைச் சூரியனின் பார்வையில் பளிச்சிடும் பிரமாண்ட பனிக்கட்டிகளை பார்ப்பதற்கும் நமது கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூமியில் இயற்கை விரித்துள்ள உண்மையான அழகை இங்கே ரசிப்பதிலும் தனி சுகம் கிடைக்கிறது.


அப்படி, இப்படியாக இயற்கையை பார்த்து ரசித்தபடியும், பிரமித்தபடியும் நடந்து சென்று அமர்நாத்தை சென்றடையும்போது, பக்தர்கள் அடையும் அளப்பரிய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. பனி லிங்கத்தை தரிசிக்க செல்லும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் வரிசையாக அவர்களை தரிசனத்திற்கு அனுப்ப, மாநில அரசு ஏற்பாடு செய்கிறது.


சுமார் 150 அடி உயரம் - அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள் பளிச்சிடும் பனி லிங்கத்தை கண்கள் தரிசிக்கும்போது, அந்த இடத்தை சென்றடைய அதுவரை அனுபவித்த கஷ்டங்கள், துயரங்கள் அத்தனையும் நொடிப் பொழுதில் பறந்து போய் விடுகின்றன. 



மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி விடுகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இங்கே, லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவது தான், இதுவரையும் புரியாத அதிசயமாக உள்ளது.


இந்த அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்த குகையில் வசிக்கும் ஒரு ஜோடி புறாக்களை பார்த்தால் மாத்திரமே அந்த யாத்திரை நிறைவுபெறும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின்படியே ஒரு ஜோடி புறாவும் பக்தர்களுக்கு காட்சித் தருகிறது.


அமர்நாத்தில் எந்த விலங்குகளையும், பறவைகளையும் காண முடியாது. காரணம், அங்கே அவை வாழவே முடியாது என்பது தான். ஆனால், இந்த ஒரு ஜோடி புறா மட்டும் எப்படி வாழ்கின்றன என்ற கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. இறைவனும், இறைவியுமே அப்படி காட்சித் தருகிறார்கள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.


அந்த ஒரு ஜோடி புறாவை பார்த்த மாத்திரத்தில், மனித பிறவி எடுத்ததற்கான அர்த்தத்தை அங்கு வரும் ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். அப்போது அவர்கள் பெறும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை உண்மையான - ஆத்மார்த்தமான மகிழ்ச்சி என்றுகூட கூறலாம்!
 

1 கருத்துரைகள்:

Sivaprathap said...

Nice Post........

Post a Comment