Tuesday 8 March 2011

கற்புக்கரசிக்கு கோவில்



த்தினி என்று சொன்னதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவள் சாட்சாத் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியே தான்!

தனது வாழ்வில் மாதவி குறுக்கிட்டதால், அவளிடமே மயங்கிக்கிடந்து வணிகத்தை மறந்தான், பொருளை இழந்தான் கண்ணகியின் கணவனான கோவலன். இழந்த பொருளை மீண்டும் பெற கண்ணகியோடு தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு புறப்பட்டான். மனைவியின் காற்சிலம்பை விற்க சென்ற இடத்தில் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

இதையறிந்த கண்ணகி பொங்கியெழுந்தாள். தனது கணவன் கள்வன் இல்லை என்று பாண்டிய மன்னன் முன்பு நிரூபித்துக் காட்டினாள். மதுரை மாநகரை தீக்கு இரையாக்கியவள், மேற்கு திசை நோக்கி நடந்தாள். சேர நாட்டு மலைப்பகுதியை அடைந்தாள். அங்கு, வேங்கை மரத்தடியில் சோர்ந்து கிடந்த கண்ணகியை, 14 நாட்களுக்கு பின்னர், கொலை செய்யப்பட்டு வானுலகம் சென்ற கோவலன் புஸ்பக விமானத்தில் வந்து தன்னுடன் அழைத்துச் சென்றான். அந்த காட்டில் இருந்த குன்றக் குறவர்கள் இந்த காட்சியை கண்டு வியந்தனர்.

ஒருமுறை மலை வளம் காண வந்த சேர மன்னன் செங்குட்டுவனிடம், குன்றக் குறவர்கள் தாங்கள் கண்ட காட்சியை கூறினார்கள். கண்ணகி பற்றி அறிய ஆவல் கொண்ட செங்குட்டுவன், தனது அவை புலவர் சீர்தலைச் சாத்தனாரை அணுகி விளக்கம் கேட்டான். அரசனுக்கு நடந்த சம்பவத்தை விளக்கினார் புலவர்.

கண்ணகியின் வரலாற்றை கேட்டு வியப்படைந்த செங்குட்டுவன், தனது நாட்டு மலைக்கு வந்து விண்ணகம் சென்ற பத்தினி தெய்வமாகிய கண்ணகிக்கு கோவில் எழுப்ப முடிவு செய்தான். அதற்காக, இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை வடித்தான். கோவிலையும் கட்டி முடித்தான்.  


பல நாட்டு அரசர்கள் முன்னிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகமும் செய்தான். கண்ணகி மக்களால் வழிபடும் தெய்வமானாள். 



 ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னன் செங்குட்டுவன், கண்ணகிக்கு கட்டிய இந்த கோவில், மங்கலாதேவி கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்த கோவில், சிலப்பதிகாரத்தில் மங்கல மடந்தை என்று குறிப்பிடப்படுகிறது.

ஆதாரங்கள் : இந்த கோவில் தற்போது தமிழ்நாடு-கேரளா எல்லையில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. செங்குட்டுவன் தான் இதை கட்டினான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கி இருந்தான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. இன்று பெரியாறு என்று அழைக்கப்படும் ஆறு தான் அன்று பேரியாறு என்று அழைக்கப்பட்டது. கண்ணகி கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து பார்த்தால் பேரியாற்று நீர்த்தேக்கத்தை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை தெளிவாக காணலாம்.

கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக உள்ள இந்த கோவிலை நாம் எளிதில் சென்று பார்த்துவிட முடியாது. காரணம், அந்த கோவிலுக்கு செல்லும் வழி கரடு முரடான மலைப்பாதையாகும். கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக கண்ணகி கோவிலுக்கு செல்ல பாதை வசதி இல்லை. கேரளா சென்று தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கிறார்கள். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோவிலை காண அனுமதி. அதனால், இக்கோவிலுக்கு வர விரும்புவோர் முன்கூட்டியே திட்டமிட்டு வருவது தான் நல்லது.




எப்படி செல்ல வேண்டும்? : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் அல்லது மதுரை சென்று, அங்கிருந்து தேனி, கம்பம், மேல்கூடலூர் வழியாக மேற்கு தொடர்ச்சிமலையை கடக்க வேண்டும். மலையை கடந்ததும் கேரள மாநில எல்லை நகரான குமுளியை அடையலாம். அங்கிருந்து ஜீப் மூலம் கண்ணகி கோவிலுக்கு செல்லலாம்.

குமுளியில் நிறைய வாடகை ஜீப்புகள் உள்ளன. மலை மேல் உள்ள கண்ணகி கோவிலுக்கு செல்ல கட்டணமாக ஒரு நபருக்கு சுமார் 50 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இறங்கும்போது தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
கண்ணகி கோவிலுக்கு வர திட்டமிடுபவர்கள், சித்ரா பவுர்ணமிக்கு முந்தைய நாளே குமுளிக்கு வந்துவிட வேண்டும். அங்குள்ள விடுதிகளில் ஒன்றில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை கோவிலுக்கு புறப்படலாம். 


கண்ணகியை தரிசித்து முடிந்ததும், அங்கிருந்து மிக அருகில் (2 கிலோ மீட்டர்) உள்ள தேக்கடிக்கு சென்று சுற்றுலாவை அனுபவிக்கலாம். 

குமுளியில் பட்டை, கிராம்பு, இலவங்கம், ஏலம், மிளகு போன்ற வாசனைப் பொருட்கள் பேமஸ் என்பதால் அவற்றை மிகக்குறைந்த விலையில் அள்ளி வந்து, பக்கத்து வீட்டாரை வியப்பில் ஆழ்த்தலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment